ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் தலைவர் ராஜினாமா!
ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் டேவிட் பீவெர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்கா சென்று விளையாடியது. அப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், மஞ்சள் நிற டேப்பைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக புகார் உடனடியாக எழுந்தது. டிவி கேமராவிலும் அது தெள்ள தெளிவாக தெரிய வந்தது. அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பேன்கிராஃப்ட் தனது தவறை ஒத்துக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதற்கு ஆதரவாக இருந்ததாகவும் கூறப்பட்டது. அதையடுத்து வார்னர், ஸ்மித்துக்கு ஒரு வருடமும் பேன்கிராஃப்ட்டுக்கு, 9 மாதமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
வீரர்களுக்கு ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதனை நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் தான் கடந்த வாரம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் நடைபெற்றது. அதில் டேவிட் பீவெர் 2-வது முறையாக வாரியத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இங்கிலாந்தில் படு தோல்வி அடைந்த அந்த அணி, அடுத்து பாகிஸ்தான் அணியுடன் நடந்த தொடரிலும் படு தோல்வி அடைந்தது. அடுத்து இந்தியாவுடன் மோத உள்ளது. இந்திய அணி இந்த மாதம் 21-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை, 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அங்கு விளையாட உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் தங்கள் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்றால்,ஸ்மித், வார்னர் போன்ற வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை டேவிட் பீவெர் மீண்டும் மறுத்தார். அதனைத்தொடர்ந்து டேவிட் பீவெர் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். துணைத் தலைவராக இருந்த எர்ல் எட்டிங்ஸ் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments