Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் லண்டன் லார்ட்சில் நேற்று நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் (பகல்–இரவு ஆட்டம்) நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியுடன் , நியூசிலாந்து அணி மோதின.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.. இதன்படி கேப்டன் ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். முந்தைய ஆட்டங்களில் வலுவான பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தி தந்த இந்த ஜோடி இந்த முறை அதிக நேரம் தாக்குபிடிக்கவில்லை. ஆரோன் பிஞ்ச் (8 ரன்), டிரென்ட் பவுல்ட்டின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டேவிட் வார்னர் (16 ரன்) பெர்குசன் வீசிய சற்று எழும்பி வந்த பந்தை அடிக்க வேண்டாம் என்று நினைத்து பேட்டை உள்பக்கமாக இழுப்பதற்குள் பந்து பேட்டில் உரசியபடி விக்கெட் கீப்பர் டாம் லாதமிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

ஸ்டீவன் சுமித் (5 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (21 ரன்), மேக்ஸ்வெல் (1 ரன்) ஆகியோரும் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வீழ்ந்தனர். 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை (21.3 ஓவர்) இழந்து பரிதவித்த ஆஸ்திரேலியா அணியை உஸ்மான் கவாஜாவும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் சரிவிலிருந்து மீட்டனர்..

அணியை படிப்படியாக சரிவில் இருந்து நிமிர வைத்த இவர்கள் சவாலான ஸ்கோரை எட்டுவதற்கும் துணை நின்றனர். ஸ்கோர் 199 ரன்களை (43 ஓவர்) எட்டிய போது இந்த கூட்டணியை பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் வில்லியம்சன் உடைத்தார். அலெக்ஸ் கேரி 71 ரன்களில் (72 பந்து, 11 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

நங்கூரம் போல் நிலைகொண்டு ஆடிய உஸ்மான் கவாஜா (88 ரன், 129 பந்து, 5 பவுண்டரி) டிரென்ட் பவுல்டின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அவரது அடுத்தடுத்த கச்சிதமான ‘யார்க்கர்’ தாக்குதலில் மிட்செல் ஸ்டார்க் (0), பெரேன்டோர்ப் (0) ஆகியோரும் வெளியேற, டிரென்ட் பவுல்ட் ஹாட்ரிக் விக்கெட் சாதனையாளராக உருவெடுத்தார்.

50 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் சேர்த்தது. டிரென்ட் பவுல்ட் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளும், பெர்குசன், ஜேம்ஸ் நீ‌ஷம் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த உலக கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த 2-வது பவுலர் டிரென்ட் பவுல்ட் ஆவார். ஏற்கனவே இந்தியாவின் முகமது ‌ஷமி இச்சாதனையை செய்திருந்தார்.

ஒட்டுமொத்த உலக கோப்பை வரலாற்றில் டிரென்ட் பவுல்டையும் சேர்த்து 11 ஹாட்ரிக் விக்கெட் சாதனை பதிவாகியுள்ளது. இதில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் இச்சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

பின்னர் 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் குப்தில் மற்றும் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ஹென்றி நிகோலஸ் 8(20) ரன்களும், மார்டின் குப்தில் 20(43) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக வந்த கேப்டன் கேன் வில்லியம்சன்னுடன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் 40(51) ரன்களும், அவரைத்தொடர்ந்து ராஸ் டெய்லர் 30(54) ரன்களும், கிராண்ட் ஹோம் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய டாம் லாதம் 14(28) ரன்களும், ஜேம்ஸ் நீசம் 9(22) ரன்களும், சோதி 5(4) ரன்னும், பர்குசன் (0) ரன் ஏதும் எடுக்காமலும், சாண்ட்னர் 12(29) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதியில் டிரண்ட் போல்ட் 2(7) ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் நியூசிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், ஜேசன் பெஹண்ட்ரோப் 2 விக்கெட்டுகளும், லயான், கம்மின்ஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

0 Comments

Write A Comment