சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் சம்மேளனத்தின் ‘தி ப்ளூ க்ராஸ்’ வழங்கிய கவுரப் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை துப்பாக்கிச்சுடுதல் வீரர் அமினவ் பிந்த்ரா பெற்றுள்ளார். ஆண்டுதோறும் ‘ப்ளூ க்ராஸ்’ சார்பில், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சர்வதேச அளவில் சிறந்த பங்களிப்பைத் தரும் வீரர், வீராங்கனைகளுக்கு கவுரவப் பட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில், ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய வீரர் அமினவ் பிந்த்ராவுக்கு , சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் சம்மேளனத்தின் ‘ப்ளூ க்ராஸ்’ சார்பில் உயரிய விருதான கவுரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் முனிச் நகரில் அபினவ் பிந்த்ராவுக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டது. அபினவ் பிந்த்ரா, 2008 ஒலிம்பிக்கில் தங்கம், 2006 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கமும், காமென்வெல்த் போட்டிகளில் 7 பதக்கங்களும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 3 பதக்கமும் வென்றுள்ளார். 2008 பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவரின் சாதனைகளைப் பாராட்டி, அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில், அபினவ் பிந்த்ரா தனது 33-வது வயதில் ஓய்வை அறிவித்தார்.
0 Comments