தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 1,200 பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நெல்லையில் அரசு மருத்துவர்கள் இருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜனவரி 1 முதல் கடந்த அக்டோபர் 7 வரை நாடு முழுவதும் 5,651 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தினால் 464 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 232 பேர் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "கேரளா, கர்நாடகா, ஆந்திராவின் ஒரு சில பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், தமிழகத்தின் சில பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன" என்று பதிலளித்தனர்.
பன்றிக்காய்ச்சலுக்குத் தேவையான டாமிஃபுளூ மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்றவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும் முறையாக சிகிச்சை பெற்றால் ஒருவாரத்தில் காய்ச்சல் குணமடைந்துவிடும். மேலும் பன்றிக்காய்ச்சலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.
0 Comments