Tamil Sanjikai

சுற்றுங்கள் நம்ம தமிழ்நாட்டில் !!!!!!!

மனிதனின் வாழ்க்கையின் பெரும் பகுதியை கல்வி , வேலை, குழந்தைகள், குடும்ப பிரச்சனை போன்றவற்றில் கழிக்கிறோம். கல்வி பயிலும் காலத்தில் படிப்பு, படிப்பு என அலையும் நாம் படித்து முடித்ததும் எப்போது வேலை கிடைக்கும்? எங்கு வேலை கிடைக்கும்? என பல குழப்பத்தில் இருக்கின்றோம் மேலும் வேலை கிடைத்தவுடன் பணிச்சுமை காரணமாக சோர்ந்து போகின்றோம். எனவே நமக்கு கிடைக்கும் வார விடுமுறை நாட்களில் பெரும்பாலான நேரத்தில் தூக்கத்திலும் , ஷாப்பிங்கிலும் , உறவினர் வீடுகளுக்குச் செல்வதிலும் மற்றும் சினிமா போன்றவற்றிற்கு சென்று கழிக்கின்றோம். வாரம் ஒரு நாள் லீவு வந்தாலே கொண்டாட்டம்தான். அதிலும் 'ஆயுத பூஜை' என்ற பெயரில் தொடர்ந்து இரண்டு நாள் லீவும், அந்த லீவுடன் இலவச இணைப்பாக சனி, ஞாயிறு விடுமுறையும் வந்தால் குதூகலம் தானே?

இப்படி ஒரு வாய்ப்பு வருகிறது என்றால் சுற்றுலா பிரியர்கள் ஒரு மாதத்துக்கு முன்பே பிளான் போடத் தொடங்கி விடுவார்கள். ... அட போங்க பாஸ்! நீங்க வேற! என் கம்பெனியில ரெண்டு நாள் தான் லீவு! என ஏங்கும் நல்ல உள்ளங்களுக்காக சில சுற்றுலாத் தலங்களின் பட்டியல் கொடுத்துள்ளோம். வாருங்கள் சுற்றலாம் ....!

1.கொடைக்கானல்:

பூஜா ஹாலிடேஸ்னா வீட்டுலயே தான் இருக்கணுமா ?????

கொடைக்கானல் தமிழ் நாட்டில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான காலநிலை நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசஸ்தலம் கொடைக்கானல் ஆகும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன. 22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி) உயரத்தில் உள்ளது. கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும், பழனி மலை வழியாகவும் செல்லலாம். இங்கு கண்களுக்கு ரம்மியமான இயற்கை எழில் சூழ்ந்த காடுகளும், பள்ளத்தாக்குகளும் நிறைய உள்ளன . மனதை மயக்கும் பறவைகளின் ஒலியும் , குளிர்ந்த காற்றும் உங்களின் மனதினை மயக்கும் . இங்கு நிறைய ரிசார்ட்கள் , தங்கும் விடுதிகள் என சுற்றலா பயணிகள் தங்குவதற்கு நிறைய நிறைய இடங்கள் இருக்கின்றன.

மேலும் இங்கே சுற்றி பார்ப்பதற்கு பிரையண்ட் பார்க் தொலைநோக்கிக் காப்பகம் , கோக்கர்ஸ் வாக், தூண் பாறைகள் ,கொடைக்கானல் ஏரி,பேரிஜம் ஏரி,கவர்னர் தூண்,கோக்கர்ஸ் வாக்,அப்பர் லேக்,குணா குகைகள் தொப்பித் தூக்கிப் பாறைகள்,மதிகெட்டான் சோலை,செண்பகனூர் அருங்காட்சியகம்,500 வருட மரம் ,டால்பின் நோஸ் பாறை,பியர் சோலா நீர்வீழ்ச்சி,அமைதி பள்ளத்தாக்கு,குறிஞ்சி ஆண்டவர் கோயில், செட்டியார் பூங்கா,படகுத் துறை,வெள்ளி நீர்வீழ்ச்சி என ஏராளமான இடங்கள் உள்ளன..

2. வால்பாறை:

பூஜா ஹாலிடேஸ்னா வீட்டுலயே தான் இருக்கணுமா ?????

மலைகளில் சொர்க்கம் என்று சொன்னாலே அது வால்பாறை தான். 17 டிகிரியில் வெப்பமும் , இரவில் 12 டிகிரியில் அடர்குளிரும் அதோடு கலந்த பச்சைசெடிகள் வாசமும், மண்வாசமும் கொடுக்கும் வால்பாறை உண்மையில் சொர்க்கம் தான். அதிலும், பொள்ளாச்சி வழியாக ஆழியார் அணை தாண்டி வாகனத்தில் மெல்லிய இசையோடு வால்பாறைக்கு மலைப்பயணம் போவதே ஒரு அலாதி இன்பம் . வால்பாறைக்கு வாகனத்தில் செல்லும் போது அங்கங்கே மலை அணில்களும் , சிங்கவால் குரங்குகளும் , காட்டுமாடு மற்றும் சில சமயங்களில் யானைகளையும் காணலாம்

பொள்ளாச்சியை தாண்டியதும் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தால் வால்பாறை வந்துவிடும். தங்குவதற்கும், தூங்குவதற்கு எந்த கவலையும் வேண்டாம். தடுக்கி விழும்போது எல்லாம் ஒரு ஹோட்டல் நம் கண் முன்னே வந்து நிற்கும் . வழியில் காணும் சின்ன சின்ன அருவிகளைக் கண்டு மனம் மயங்கி நிற்கும் போது அட்டை பூச்சிகளும் உங்களை அட்டாக் பண்ண வாய்ப்பு உள்ளது. எனவே கொஞ்சம் கவனம் தேவை.
இங்கு தேயிலை தோட்டத்தின் அழகினை காலை மாலை என எப்பொழுதும் கண்டு ரசிக்கலாம். இனியும் என்ன தாமதம்? வண்டி எடுங்க! வால்பாறை விடுங்க ....!

3. மூணார்:

பூஜா ஹாலிடேஸ்னா வீட்டுலயே தான் இருக்கணுமா ?????

மேற்குத் தொடர்ச்சி மலையின் சிதறிய ஒட்டுமொத்த அழகையும் சேர்த்து வைத்தாற் போல் காட்சியளிக்கும் மூணார் மலைப் பிரதேசம் ஓர் சொர்க்கம் ஆகும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரமாண்ட இயற்கை அழகுடன் பசுமையான சுற்றுலா அம்சமாகும். மாறுபட்ட புவியியல் அமைப்பு, கண்களுக்கு விருந்தளிக்கும பசுமைக் காடுகளும், தேயிலைத் தோட்டங்களும் என எத்தனை முறை பயணித்தாலும், ஒவ்வொரு முறையும் மாறுபட்ட அனுபவத்தைத் தரக்கூடிய சிறப்புடையது. குறிப்பாக, தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட நெரிசல் மிகுந்த சுற்றுலாத் தலங்களைக் காட்டிலும் இப்பகுதி கூடுதலாகவே பயணிகளுக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடியது.

மூணாரில் நீங்கள் ஒரு வாரம் தங்கி ரசிக்கத் தகுந்த வகையில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மாட்டுபட்டி அணை, இந்தியா - சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் மாட்டுப் பண்ணை, ஆட்டுக்கல் அருகே உள்ள நீர்வீழ்ச்சிகள், சித்திராபுரம், லாக் ஹார்ட் கேப், ராஜமலா, இரவிக்குளம் தேசிய பூங்கா என பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம். அவற்றுள் உங்களது நேரத்திற்கு ஏற்றவாறும், பயணத் திட்டத்திற்கு ஏற்றவாறும் தேர்வு செய்து சுற்றி ரசிக்கலாம்.

4. மசினகுடி:

பூஜா ஹாலிடேஸ்னா வீட்டுலயே தான் இருக்கணுமா ?????

'மலைகளின் ராணி' எனப்படும் ஊட்டியிலிருந்து மைசூரு செல்லும் வழியில் 30கிமீ தொலைவில் உள்ளது. காடுகள் சூழ்ந்த இயற்கையின் கொடையான அழகிய ஊர் மசினகுடி கிராமம். ஊட்டிக்கு மிக அருகில் மசினகுடி இருந்தாலும், வணிகமயமாக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள் போல் மாசடையாமல் இருக்கிறது. மான்கள், யானைகள், பறவைகள், குரங்குகள், காட்டெருமைகள் என பலதரப்பட்ட மிருகங்களை இங்கே எளிதில் பார்க்கலாம். இந்த இயற்கையை உருக்குலையாமல் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுவது இஞ்குள்ள மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களே. மசினகுடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், ஜிங்கிள் சஃபாரி, தேயிலைத் தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோயில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம். அழிவின் விளிம்பில் இருந்த தேசிய விலங்கான புலிகளைக் காப்பதற்காக, தமிழத்தில் அமைக்கப்பட்ட முதல் வனக்காப்பகம் முதுமலை. இது 1940ல் நிறுவப்பட்ட இந்த சரணாலயம், தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்கள் இணையும் அடர்காடுகளில் அமைத்திருப்பது இதன் சிறப்பு. . முதுமலைச் சரணாலயம், மசினகுடி, தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, மற்றும் நெல்லகோட்டா என ஐந்து வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சரணாலயத்தினுள் முதலில் செல்லவேண்டிய இடம், தெப்பக்காடு யானைகள் முகாம்.

காட்டுக்குள் ஓடும் ஒரு சிறு ஓடைதான் தமிழக - கர்நாடக எல்லையைப் பிரிக்கும் கோடு. அந்தப் பக்கம் பந்திப்பூர் வன விலங்குச் சரணாலயம். அங்கும் சவாரி, ட்ரெக்கிங் போன்றவை உண்டு. அப்படியே பந்திப்பூரைக் கடந்து குண்டக்கல் என்ற ஊரில் இடதுபுறம் செல்லும் சாலையைப் பிடித்து சில கி.மீ தூரம் சென்றால், கேரளா மாநிலத்தின் வயநாடு வன விலங்குகள் சரணாலயம் இருக்கிறது.

மரத்தாலான வீடு, மர உச்சியில் வீடு, பழங்குடியினர் குடிசை, காட்டுக்குள் வீடு, குடில், தனியார் தங்கும் விடுதி என விதவிதமான தங்கும் வசதிகள் உள்ளன. காட்டிற்குள் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டிருப்பதால் விலங்குகளைத் துன்புறுத்தாத வகையில் இரவு நேரங்களில் மங்கலான ஒளி வீசும் விளக்குகள் மட்டுமே இங்கு பயன்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தை சுற்றி இன்னும் நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த விடுமுறைக்கு ஒரு இடத்தையாவது சுற்றிப்பாருங்கள் பின் குறிப்பு : ஒரு நாள் மட்டும் விடுமுறை இருப்பவர்கள் என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா ??? நமக்கு எதுக்கு அந்த லீவு ? அதையும் ரத்து செய்து விட்டு ஆஃபீசில் அமர்த்திடுங்கள் நன்றி!

0 Comments

Write A Comment