Tamil Sanjikai

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்காது. தமிழகமும் இந்தியாவின் ஒரு அங்கம்தான் என்பதை மத்திய அரசு உணரும் என்று மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு முதற்கட்டமாக ரூபாய் .354 கோடி ஒதுக்கியுள்ளது. இது, நாங்கள் கேட்டதைவிட மிகவும் குறைவுதான். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்காது. தமிழகமும் இந்தியாவின் ஒரு அங்கம்தான் என்பதை மத்திய அரசு உணரும். அதுபோல சட்டமன்றத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத வைகோவுக்கு, தமிழக அரசின் நிலைப்பாட்டை பற்றி கூற தகுதி இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது, இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டார். அவரைப் போல் நேரத்திற்கு தகுந்தாற்போல் எங்களுக்குப் பேச தெரியாது.

ஏதாவது ஒரு சம்பவம் நடைபெற்றால், போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது வழக்கம். வழக்கு விசாரணையின்போது, அதில் உண்மைத்தன்மை மற்றும் போதிய ஆதாரம் இல்லை என்றால் வழக்கு திரும்பப் பெறப்படுவது இயற்கையான ஒன்று. அதேபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்குகளை ரத்து செய்திருக்கலாம்.காவேரி மேலாண்மை ஆணைய சட்டவிதிகளின்படி எந்தவொரு மாநிலமும் புதிதாக அணை கட்ட வேண்டும் என்றால், பிற மாநிலங்களில் தடையில்லாச் சான்று வாங்க வேண்டும். தமிழக அதிகாரிகள் டெல்லி சென்று உள்ளார்கள். மேகதாது அணை தொடர்பாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை அங்கு பதிவு செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment