Tamil Sanjikai

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் தேர்தலை புறக்கணித்ததால், அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 410 வாக்குகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. ஐந்து ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அல்லாடும் மக்களின் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

அடிப்படை வசதிகளில் முக்கியமான குடிநீர் மற்றும் சாலைவசதி இல்லாமல், உருக்குலைந்து போன சாலையில் பயணிக்க இயலாமல் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்பட்டு வந்த செய்யாறு அடுத்த சித்தாலப்பாக்கம் கிராம மக்கள் தான் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

இதனால் அந்த கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மாலை வரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மட்டும் நாள் முழுவதும் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் வாக்கு எந்திரங்களை தூக்கிச்சென்றனர்.

சாலைவசதி இல்லாததால் அரசு பேருந்து மட்டுமல்ல தனியார் வாகனங்கள் கூட ஊருக்குள் வருவதில்லை என்று பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

தங்கள் கோரிக்கையை ஏற்று கொள்ளாத ஆட்சியாளர்களை கண்டித்தும், அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டவும் தான் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளதாக ஆதங்கம் தெரிவித்தனர்.

அதிகாரிகள் அந்த ஊரில் உள்ளவர்களை சமாதானம் செய்து அழைத்து வர முன்றனர். தங்களுக்கு சாலைவசதி முழுமையாக செய்து தந்தால் மட்டுமே வாக்களிபோம் என்று கூறி உறுதியாக மறுத்து விட்டனர்.

நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தால், வெற்றி பெறும் வேட்பாளர் தங்களை மறந்து விடுவதால் நிகழ்ந்த எதிர்வினையே இந்த தேர்தல் புறக்கணிப்பு என்கின்றனர் இந்த கிராம மக்கள்.

0 Comments

Write A Comment