Tamil Sanjikai

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற பொது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், இந்து முன்னணியினர் சிலர் உள்ளே நுழைந்து, மேடையை நோக்கி செருப்புகளை வீசியும், தொண்டர்கள் மீது கற்களை வீசியும் காலித்தனத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. கி.வீரமணிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதே போல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் வாகனம் மீது சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கி.வீரமணிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீது இந்துத்துவ அமைப்புகள் கொலை நோக்கோடு தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை இனிமேலும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அனுமதிக்காது. தமிழக அரசு உடனடியாக கி.வீரமணிக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் தமிழக அரசே பொறுப்பு என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி எச்சரிக்கின்றது” என்று கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment