காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காகக் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தை நீட்டிக்க வேண்டுமென்ற தி.மு.கவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை ஒன்றைக் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க மத்திய நீர் வளக் குழுமம் அனுமதி அளித்திருக்கிறது. இதனால், காவிரி நீரைப் பொறுவது தொடர்பான கவலைகள் தமிழகத்தில் எழுந்ததையடுத்து, அரசியல் கட்சிகள் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியது .
இந்நிலையில், இது தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டம் தொடங்கியவுடன் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.
"5.12. 2014 மற்றும் 27.03.2015 ஆகிய நாட்களில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கவனத்தில் கொள்ளாமலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டபடி, கீழ்படுகை மாநிலங்களின் அனுமதியைப் பெறாமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்ற உத்தரவையும் மீறியும், தற்போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை தொடங்கவுள்ளதற்கும் மேகதாதுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளக் குழுமம், 22.11.2018 அன்று அனுமதி வழங்கியதற்கும் இம்மாமன்றம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது."
"மத்திய நீர்வளக் குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப் பெற அக்குழுவிற்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டுமென்றும் இம்மாமன்றம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ கர்நாடகாவில் உள்ள காவிரிப் படுகையில் மேகதாது அல்லது வேறு எந்த ஒரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்" என முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு இந்தத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் ராமசாமி, டிடிவி தினகரன், தமீமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மு.க. ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்களால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. மேலும், "தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது தன்னிச்சையானது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இதுவரை முழு நேரத் தலைவர் நியமிக்கப்படவில்லை. மேகதாது அணைக்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. மேகதாது அணையைக் கட்ட தமிழகம் தடையைப் பெற்றிருக்க வேண்டும். காவிரிக்கு எந்த விதத்திலும் கர்நாடகம் முழுமையாக சொந்தம் கொண்டாட முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், தமிழகத்திலிருந்து அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் சென்று முதல்வர் பிரதமரை ஏன் சந்திக்கவில்லை?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.
உறுப்பினர்களின் பேச்சுகள் தொடர்பாக முதலமைச்சரின் பதிலுரைக்குப் பிறகு இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இந்தக் கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், "ஆணையத்தைக் கண்டித்து, மத்திய அரசைக் கண்டித்து அந்தத் தீர்மானம் இருந்திருக்க வேண்டும். ஆனால், வேண்டுகோள் விடுக்கும் வகையில் இருக்கிறது. கண்டனத் தீர்மானமாக இல்லை என்ற கருத்தை எடுத்துச் சொன்னேன். ஆனால், அரசு அதை ஏற்கவில்லையென்றாலும் டெல்டா பகுதியினரின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக வைத்து ஆதரித்துள்ளோம். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் சென்று சேரவில்லை; மத்திய அரசு போதுமான நிதி தரவில்லை. ஆகவே அது குறித்தும் விவாதிப்பதற்காக நாளையும் இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரினோம். அந்த வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. அதைக் கண்டிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் , மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தின் நீர்வளம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "மேகதாது அணை விவகாரத்தில் ஒரு சுமுகமான தீர்வைக் காண கர்நாடக அரசு விரும்புகிறது. இந்த வருடம் போல நன்றாக பருவமழை பெய்யும் காலத்தில், தண்ணீரை சரியான முறையில் திறக்க இந்த அணை உதவும். இந்த ஆண்டைப் போல மேட்டூர் அணையைத் திறந்து தண்ணீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க முடியும். ஆனால், இந்த அணை குறித்து தவறான அபிப்பிராயம் தமிழக மக்களின் மனதிலும் தமிழக அரசிடமும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கம் வேறு. ஆகவே உங்களைச் சந்தித்து இந்தத் திட்டம் குறித்தும் மேலே சொன்ன அம்சங்கள் குறித்து விளக்க விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
0 Comments