நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசியுள்ளார்.
நேற்று அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் நடைபெறவில்லை. எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் எனக் கூறி பேச்சுவார்த்தைக்கு அழைக்க தே.மு.தி.க வலியுறுத்தியதால் பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜயகாந்த் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பிரேமலதா, சுதீஷ் மற்றும் அவர் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்துப் பேசினார்.
கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரசின் திருநாவுக்கரசர் அங்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்கவே திருநாவுக்கரசர் அங்கு சென்றதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்திடம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க நிலைப்பாடு குறித்துப் பேசியதாகத் தெரிவித்தார். நாட்டு நலன் கருதி நல்ல முடிவு எடுக்குமாறு விஜயகாந்தை கேட்டுக் கொண்டதாகக் கூறிய அவர், கூட்டணி குறித்து பேசப்பட்டதா? என்ற கேள்விக்கு அது பற்றி பிறகு கூறுவதாக பதிலளித்துவிட்டுச் சென்றார்.
0 Comments