வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் ராகுல்காந்தி தான் வெற்றி பெறுவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பாஜகவிற்கு எதிரான மன நிலையில் மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க முன் வந்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு இவ்வாறு செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜகவின் 5 ஆண்டு ஆட்சியில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
எச்.ராஜாவின் அவதூறு பேச்சை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ராகுல்காந்தி தலைமையில் அகில இந்திய அளவில் மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் ராகுல்காந்தி தான் வெற்றி பெறுவார். உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளே இல்லை. அப்படி இருக்க உள்ளாட்சி அமைப்புகள் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்?. எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். வருகிற ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது என அவர் தெரிவித்தார்.
0 Comments