Tamil Sanjikai

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவர் வீட்டின் அருகே விவசாயத்திற்காக 7 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு சரியாக மூடப்படாமல் விடப்பட்டது.

இதனிடையே, நேற்று முன்தினம் பிரிட்டோவின் 2வது மகனான சுஜித் வில்சன் (வயது 2) ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த அவனை மீட்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது. பின்னர் சுஜித் 70 அடி ஆழத்திற்கும், பின்பு 80 அடி ஆழத்திற்கும் சென்றது மீட்பு பணியில் தொய்வை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 100 அடி ஆழத்திற்கு சென்ற அவனை மீட்பதற்காக ரிக் இயந்திரம் உதவியுடன் மற்றொரு குழி தோண்டப்பட்டு வருகிறது. 40 மணிநேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 30 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு உள்ளது.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் பற்றிய கேள்விக்கு அவர், அந்த குழந்தை உயிருடன், நலமுடன் மீண்டு வரவேண்டும் என்று அந்த ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கிறேன். இதுபோன்ற விவகாரங்களில், பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் நிறைய விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

நீண்டநேர போராட்டத்திற்கு பின்பும் அரசால் குழந்தை மீட்கப்படாதது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு முயற்சி செய்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறப்புடன் இருக்கும். விடாமுயற்சியுடன் மீட்பு பணியில் அரசு ஈடுபட்டு வருகின்றது. அவர்களை குறை கூற முடியாது என்று கூறினார்.

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றை மூடியிருக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment