திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவர் வீட்டின் அருகே விவசாயத்திற்காக 7 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு சரியாக மூடப்படாமல் விடப்பட்டது.
இதனிடையே, நேற்று முன்தினம் பிரிட்டோவின் 2வது மகனான சுஜித் வில்சன் (வயது 2) ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த அவனை மீட்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது. பின்னர் சுஜித் 70 அடி ஆழத்திற்கும், பின்பு 80 அடி ஆழத்திற்கும் சென்றது மீட்பு பணியில் தொய்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 100 அடி ஆழத்திற்கு சென்ற அவனை மீட்பதற்காக ரிக் இயந்திரம் உதவியுடன் மற்றொரு குழி தோண்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்து உள்ள செய்தியில், ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
0 Comments