Tamil Sanjikai

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர்.

அப்போது அவர்கள் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு நேரில் சென்றதோடு, மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மூன்றாவது நாளாக மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது. அவருடைய கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.

போராட்டத்தின் போது மம்தா பானர்ஜி பேசியதாவது:-

சிபிஐ விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என சொல்லவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு மூலம் எங்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. போலீஸ் கமிஷனரை கைது செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

நீதித்துறை மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் நாங்கள் மிகவும் மரியாதை காட்டுகிறோம். நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் என கூறினார்.

0 Comments

Write A Comment