Tamil Sanjikai

கர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இதனால் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக கூறி குமாரசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வற்புறுத்தி வருகிறது. அதேசமயம், ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அவர்களை பாரதீய ஜனதா ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

ஆனால் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக வீட்டு வசதி துறை மந்திரியாக இருந்த எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் நேற்று தங்கள் எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகினார்கள். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர். இதனால் பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து இருக்கிறது.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பாந்திரா பகுதியில் உள்ள சோபிடெல் என்ற நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 7 பேர் காங்கிரசையும், 3 பேர் ஜனதாதளம்(எஸ்) கட்சியையும் சேர்ந்தவர்கள். 2 பேர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள்.

இதற்கிடையே பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களில் பிரதாப் கவுடா பாட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி, பைரதி பசவராஜ், பி.சி.பாடீல், எஸ்.டி.சோமசேகர், அர்பைல் சிவராம் ஹெப்பார், மகேஷ் குமதல்லி, கே.கோபாலையா, எச்.டி.விஸ்வநாத், நாராயண் கவுடா ஆகிய 10 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாகவும் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக தங்களை பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் தங்கள் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடுமாறும், அவர் தங்களை பதவி நீக்கம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் 10 எம்.எல்.ஏ.க்களும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனர். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் குறித்து பதில் அளிக்க கர்நாடக சபாநாயகர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டனர். ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன்பு ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர். சபாநாயகர் இன்று முடிவு எடுக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக டி.ஜி.பிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், விசாரணையை நாளை (ஜூலை 12) ஒத்திவைத்தது.

0 Comments

Write A Comment