அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த ராகுல், தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில், கட்சித் தலைமை தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது.
லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான தோல்வியை தழுவியதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று, அதன் தலைவர் ராகுல் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். ராகுல், தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட பல கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியும், ராகுல் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார்.
பார்லிமென்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி, தேசிய தலைவர் இல்லாமல் தடுமாறி வருகிறது. இந்த நிலை அதிக நாட்கள் தொடர கூடாது என்பதால், அந்த கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில், கட்சித் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தேசிய அளவில் கட்சியை வழிநடத்த, இளம் தலைவர் ஒருவர் தான் தேவை என, கட்சிக்குள் குரல் ஓங்கியுள்ளது. 'தேசிய அரசியல் அனுபவம், இளமை துடிப்பு, தீர்க்கமான முடிவு எடுக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைந்த இளம் தலைவர் ஒருவரே, கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும்' என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான அம்ரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதனால், காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிப்பதில் சச்சின் பைலட் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா, இவர்கள் இருவரிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. எனினும், சிந்தியாவை விட சச்சினுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த ஆலோசனைக்காக, வரும் 10 ஆம் தேதி, டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments