Tamil Sanjikai

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த மே 25-ந் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அக்கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். அத்துடன் புதிய தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறும் கூறினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் தலைவர்கள், தலைவர் பதவியில் நீடிக்குமாறு ராகுல் காந்தியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ராகுல் காந்தி பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பதவி விலக முன்வந்தனர்.

காங்கிரஸ் முதல்-மந்திரிகள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), கமல்நாத் (மத்தியபிரதேசம்), அமரிந்தர் சிங் (பஞ்சாப்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, பதவி விலகல் முடிவை கைவிட்டு, தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு வற்புறுத்தினார்கள்.

இதனால், ராஜினாமா முடிவை ராகுல் காந்தி வாபஸ் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ராஜினாமாவை ஏற்கனவே தாக்கல் செய்து விட்டதாகவும், தற்போது தான் காங்கிரஸ் தலைவர் இல்லை என்றும், காரிய கமிட்டியை விரைவில் கூட்ட வேண்டும் என்றும், தாமதமின்றி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதன்பிறகு ராகுல் காந்தி அதிகாரபூர்வமாக தனது ராஜினாமாவை அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள 4 பக்க கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுவதை தனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியம் ஆகும். இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியை மீண்டும் வலுப்படுத்த கடுமையான முடிவு எடுக்க வேண்டியது ஆகிறது. கட்சியின் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்க வேண்டுமே தவிர மற்றவர்கள் பொறுப்பு ஏற்பது சரியாக இருக்காது.

புதிய தலைவரை நான் நியமிக்க வேண்டும் என்று எனக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்படி நான் தேர்வு செய்வது சரியாக இருக்காது. புதிய தலைவரை தேர்வு செய்யும் விஷயத்தில் கட்சி நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்.

நான் பதவி விலகியதும், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியை உடனடியாக தொடங்குமாறு காரிய கமிட்டியில் உள்ள சக தலைவர்களை கேட்டுக்கொண்டேன். அவர்களுடைய நடவடிக்கைக்கு எனது முழு ஆதரவு உண்டு என்றும் தெரிவித்தேன்.

அரசியல் அதிகாரத்துக்காக நான் ஒருபோதும் போராடியது கிடையாது. பாரதீய ஜனதா மீது எனக்கு வெறுப்போ, கோபமோ கிடையாது. இந்தியா பற்றிய அக்கட்சியின் கொள்கைகளைத்தான் நான் எதிர்க்கிறேன். பல்வேறு தரப்பு மக்களிடமும் சகோதரத்துவம் மற்றும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் வகையிலேயே நமது பிரசாரம் அமைந்து இருந்தது.

பிரதமர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக நான் தனிப்பட்ட முறையில் போராடினேன். இந்த தேசத்தின் மீது வைத்துள்ள அன்பால், நாட்டின் பாரம்பரிய கொள்கைகளை பாதுகாப்பதற்காக போராடினேன். அந்த சமயத்தில் நான் முற்றிலும் தனியாக நின்று போராடினேன். அதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்.

தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் ஒளிவுமறைவு இன்றியும், நடுநிலையோடும் இருக்க வேண்டும்.

தேர்தலின் போது பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது. விவசாயிகள், வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள், பெண்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் என நாட்டில் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டின் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

பிரதமர் வெற்றி பெற்றதால் அவர் மீதான ஊழல் புகார்கள் இல்லை என்று ஆகிவிடாது. பணத்தாலும், பிரசாரத்தாலும் உண்மையின் ஒளியை ஒருபோதும் மறைத்துவிட முடியாது.

நமது அரசமைப்பு நிறுவனங்களை மீட்டெடுக்க இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இதற்கு காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும்.

எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கட்சியின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். என் மீது காட்டும் அன்புக்காக இந்த தேசத்துக்கும், நான் சார்ந்துள்ள இயக்கத்துக்கும் மிகுந்த நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை தொடர்ந்து, அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்படும் காங்கிரஸ் தலைவர் என்ற பதவி நீக்கப்பட்டு இருக்கிறது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு’ என்று மட்டும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தனது ராஜினாமாவை ராகுல் காந்தி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அக்கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ராகுல் காந்தியின் ராஜினாமாவை காரிய கமிட்டி ஏற்றுக் கொண்டு , புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ராகுல் காந்தி தலைவர் பதவியில் நீடிப்பார் என்று தெரிவித்தன.

மூத்த தலைவரான மோதிலால் வோரா காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்படலாம் என்று வெளியான தகவலையும் அந்த வட்டாரங்கள் மறுத்தன.

0 Comments

Write A Comment