Tamil Sanjikai

மக்களவைத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் மோடியும், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவும் சென்றனர். அப்போது அவர்கள் இருவரையும் கட்சித் தொண்டர்கள் ரோஜா இதழ்களை தூவி வரவேற்றனர். தொண்டர்களைப் பார்த்து உற்சாகத்துடன் மோடி கையசைத்தார்.

பின்னர் பேசிய அமித் ஷா, இது வரலாற்று வெற்றி என்றும், 50 ஆண்டுகளுக்குப் பின் ஒரு கட்சி இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார். தெலுங்கு தேசம் கட்சியைச் சாடிய அவர், இன்னும் அக்கட்சி வாக்கு கணக்கையே தொடங்கவில்லை என்று விமர்சனம் செய்தார்.

17 மாநிலங்களில் பாஜகவுக்கு 50 சதவீதம் வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் காங்கிரசுக்கோ பெரிய ஜீரோ கிடைத்திருப்பதாகவும் விமர்சித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மோடி, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல தேர்தல் நடந்துள்ள போதிலும், இந்த தேர்தலில் தான் அதிக வாக்குகள் பதிவாகி இருந்ததாக பெருமிதம் தெரிவித்தார். 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்திய போதும் மக்கள் வாக்கினைப் பதிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

தற்போது நாட்டில் இரண்டே சாதிகள் தான் இருப்பதாகக் கூறிய மோடி, ஒன்று ஏழைகள் என்றும் மற்றொன்று அந்த ஏழைகளை வறுமைக்கோட்டுக்கு வெளியே கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தார். தனக்காக எதுவும் செய்து கொள்ளப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், அனைத்தும் இனி நாட்டுக்காக தான் என்றும் சூளுரைத்தார்.

0 Comments

Write A Comment