நாடு விடுதலை பெற்ற பிறகு 1952-ம் ஆண்டில் மட்டும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு உருவான அரசியல் சூழ்நிலைகள், மாநில சட்டசபைகள் கலைப்பு, கவிழ்வது போன்ற காரணங்களால் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் இரண்டுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுகிறது. எப்போதாவது சில சந்தர்ப்பங்களில் சூழ்நிலைகள் சாதகமாக அமையும் போது சில மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதாள், அதிக அளவில் செலவு ஆகிறது. அதாவது இரண்டுக்கும் தனித்தனியே தேர்தல் நடத்தப்படுவதால் அரசாங்கத்துக்கு அதிக செலவு ஆகிறது.
நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு. இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிறபோது பெரும் செலவை குறைக்க முடியும். அடிக்கடி தேர்தல்கள் நடத்துவதை தவிர்க்க முடியும். அரசு அதிகாரிகளை, ஊழியர்களை தேர்தல் பணிகளில் அடிக்கடி ஈடுபடுத்தும் தேவை எழாது. ஆனால் இதில் அனைத்துக்கட்சி தலைவர்களிடம் ஒருமித்த கருத்தாக இல்லை.
இந்த நிலையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் 19–ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் அங்கம் வகிக்கிற அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமை வகிப்பார். இதற்கான அழைப்பு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எழுதி உள்ளார்.
0 Comments