Tamil Sanjikai

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது இதனால் உடனடி முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், இரு அவைகளிலும் வங்கமொழித் திரைப்பட இயக்குநர் மிருனாள் சென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது, இதையடுத்து, மாநிலங்களவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக, திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

மாநிலங்களவை தலைவர் பலமுறை கேட்டுக் கொண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை கைவிடாததால், அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். இதனால், உடனடி முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment