Tamil Sanjikai

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலின்போது, பெரியளவிலான தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக, உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.

நாடு முழுவதும், வருகிற 11ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக, மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மொத்தமுள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கு, வருகிற 11ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 6ஆம் தேதி வரை, 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீரில் நீடித்து வரும் பதற்றத்தின் காரணமாகவும், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாகவும், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும், 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பலத்த பாதுகாப்புப் அளிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில், உளவுத்துறையினர் வெளியிட்டுள்ள தகவலில், ஜம்மு-காஷ்மீரில், தேர்தலை சீர்குலைக்கும் வகையில், மாநிலத்தில் பல்வேறு இடங்களில், பெரியளவிலான தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தீவிரவாதிகளை உள்ளடக்கிய, 3 குழுக்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI, அமைத்திருப்பதாக, தகவல் கிடைத்திருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த 3 தீவிரவாத குழுக்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தேர்தலின்போது, பெரியளவிலான தாக்குதலை நடத்த இருப்பதாக, உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.

இந்த 3 தீவிரவாத குழுக்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்குச்சாவடிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாகவும், உளவுத்துறை கூறியிருக்கிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாதிகளை பயன்படுத்திக் கொள்ள துடிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இதற்காக, எல்லை தாண்டி, அவர்களை இந்தியாவிற்குள் ஊடுருவ செய்து, 3 குழுக்களுக்கும் பயிற்சி அளிக்க, பகீர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், உளத்துறை எச்சரித்திருக்கிறது.

0 Comments

Write A Comment