Tamil Sanjikai

அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து , சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் மனு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்டப்பேரவை செயலாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ. வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய மூவரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் கடந்த 26 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து பதிலளிக்குமாறு 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் அனுப்பபட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள்ளாக அவர்கள் பதிலளிக்க வேண்டும். அந்த பதில் ஏற்புடையதாக இல்லை என சபாநாயகர் கருதினால், அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட முடியும்.

இந்த நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தலைமை செயலகத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து, சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மான முன்மொழிவை அளித்தார்.

தீர்மான வடிவு இணைக்கப்பட்டுள்ள அதில், 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில் சட்டமன்றத்தின் பெரும்பான்மையினை மாற்றியமைக்கும் விதத்தில் இவ்வாறான முடிவுகளை சட்டமன்றப் பேரவைத் தலைவர் எடுப்பது, தமிழக சட்டமன்ற மாண்பிற்கு கேடாய் விளைந்திடும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களாட்சியில் ஒரு சட்டமன்றப் பேரவைத் தலைவர், இவ்வாறு நடந்துகொண்டால் அது அவர் நடுநிலைமையோடு செயல்படவில்லை என்பதையே உணர்த்துகிறது என்றும், எனவே, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை முன்மொழிவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது ஜனநாயக படுகொலை என்றார்.

பேரவை தலைவர் அல்லது துணை தலைவரை பதவியில் இருந்து நீக்குவதற்காக, அரசமைப்பு சட்டத்தின் 179வது பிரிவு சி உட்பிரிவின்படி தனி தீர்மானம் கொடுக்க விரும்பும் உறுப்பினர், எழுத்து மூலமாக தீர்மான வரைவுடன் பேரவை செயலருக்கு 14 நாட்கள் முன்னறிவிப்புடன், அதன் பிரதி ஒன்றை பேரவை தலைவருக்கும் கொடுக்க வேண்டும்.

அலுவல் பட்டியலில் சேர்க்கப்பட்ட தீர்மானம், வினா நேரம் முடிவுற்றதும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தீர்மானத்தை கொண்டுவர இசைவளிக்கும் உறுப்பினர்களை அவரவர் இடங்களில் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொள்வார். 35க்கும் குறையாத உறுப்பினர்கள் எழுந்து நின்றால் தீர்மானத்திற்கு அனுமதி கிடைத்ததாக அறிவிக்க வேண்டும்

0 Comments

Write A Comment