Tamil Sanjikai

ஒடிசா முதல்வராக 5 வது முறையாக இன்று பதவி ஏற்றார் நவீன் பட்நாயக். அவருக்கு ஒடிசா ஆளுநர் கணேஷ் லால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் ஒரிசா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 147 தொகுதிகளில் ஆளும் பிஜூ ஜனதா தளம், 112 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

மேலும், பாஜக 23 தொகுதிகளை பெற்று முதல்முறையாக ஒடிசாவில் பிரதான எதிர்க்கட்சியாக தகுதி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 9 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

இதையடுத்து, 5 வது முறையாக ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் இன்று மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஒடிசா ஆளுநர் கணேஷ் லால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த 5 வருடங்கள் நவீன் பட்நாயக் ஆட்சி செய்வதன் மூலம், நாட்டிலேயே அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். முன்னதாக இருந்த மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங்க் ஆகியோரது சாதனைகளை நவீன் பட்நாயக் முறியடிக்கிறார். நவீன் பட்நாயக் கடந்த 2000ம் ஆண்டு முதல் ஒடிசாவில் முதல்வராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment