வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், ‘மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலிப்பதாக கூறியும் போராட்டம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. 10 லட்சம் அரசு அலுவலர்களில் அரசு மருத்துவர்களுக்கு மட்டுமே 20 ஆண்டுகளில் உறுதியளிக்கப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. உயர் ஊதியம் பெறுவதற்கான காலமுறை அடிப்படையில் உறுதி அளிக்கப்பட்ட ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. மருத்துவ சேவை வழங்குவதில் அரசு மருத்துவர்களின் பங்கினை அரசு என்றும் குறைத்து மதிப்பிட்டதில்லை. மத்திய அரசு பணிக்கும் மாநில அரசு பணிகளுக்கும் பணி அமைப்பு அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது. பணி அமைப்பு அடிப்படையிலேயே வேறுபாடுள்ள நிலையில் சம்பள விகிதத்தை மட்டுமே ஒப்பிடுவது நியாயமற்றதாகும். மக்கள் நலன் பாதிக்கப்படும் இத்தகைய போராட்டத்தை அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. போராட்டம் தொடர்ந்தால் மக்கள் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments