காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், அதற்காக காங்கிரஸ் கட்சியுடனோ, மம்தா பானர்ஜியுடனோ கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கஜா புயல் நிவாரண நிதியை பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று கூறினார். தமிழக அரசு மக்களுக்காக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மரியாதை நிமித்தமாக தான் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோருடன் சந்திப்பு நடத்தியதற்காக அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் கமல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மங்கலம் கொம்பு, கேசிபட்டி, பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
0 Comments