நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க வென்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி, வரும் 30ம் தேதி, டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின், 17வது மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, 303 இடங்களிலும், அந்த கட்சி தலைமையிலான தே.ஜ., கூட்டணி, 353 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மாேடி மற்றும் அவரது தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி, டெல்லியில், வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளது.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விஐபிக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மாேடியையும், பாஜவையும் கடுமையாக சாடி பிரசாரம் செய்த, மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மாேடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: ‛‛பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி எனக்கும் அழைப்பு வந்துள்ளது. பிற மாநில முதல்வர்களையும் தொடர்பு கொண்டு பேசினேன். நாட்டில் புதிய அரசு அமையும் போது, அதன் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமைக்குரிய விஷயம். எனவே, நான் அந்த நிகழ்ச்சியில் கட்டாயம் பங்கேற்பேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments