Tamil Sanjikai

மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநில சட்டசபைக்கும், பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் அரியானா சட்டசபைக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகின்றன.

90 உறுப்பினர்களை கொண்ட அரியானாவில், ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், மராட்டியம் மற்றும் அரியானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது. இதற்காக காலையிலேயே வாக்காளர்கள் மிக ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர்.

அரியானா மற்றும் மராட்டியத்தில் காலை 9 மணி நிலவரப்படி வரை வாக்குப்பதிவு 8.73 சதவீதம் மற்றும் 5.46 சதவீதமாக இருந்தது.

மோர்ஷி-வாருத் சட்டசபை தொகுதி (அமராவதி மாவட்டம்) சுவாபிமானி கட்சி வேட்பாளர் தேவேந்திர புயார் வாக்குப்பதிவு நாளில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். பாஜகவின் விவசாய அமைச்சர் அனில் போண்டேவுக்கு எதிராக தேவேந்திர பூயார் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சுவாபிமானி ஷெட்கரி சங்கத்னா கட்சியின் தலைவருமான ராஜு ஷெட்டி கூறும் போது,

எங்கள் வேட்பாளர் தேவேந்திர பூயார் தொகுதியில் பணம் விநியோகம் குறித்து புகார் அளித்திருந்தார், ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை. அவர் மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து இரவு முதல் இன்று வரை ரோந்து பனி மேற்கொண்டார். இன்று அதிகாலை 5.30 மணியளவில், அவரது கார் நகரத்திற்கு 1 கி.மீ தூரத்தில் இருந்தபோது அவர் தாக்கப்பட்டார்.

"முகமூடி அணிந்த வந்த சுமார் 5 முதல் 6 நபர்கள் அவரை தாக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் அங்கு கூடினர். இதனை தொடர்ந்து தேவேந்திர பூயார் வாகனத்திற்கு தீ வைத்த விட்டு மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தேவேந்திர பூயார் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக அமராவதி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார் என கூறினார்.

அரியானா மற்றும் மராட்டியத்தில் காலை 10 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 8.92 சதவீதம் மற்றும் 5.77 சதவீதமாக இருந்தது.

0 Comments

Write A Comment