கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் திரும்ப பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது நம்பிக்கை வாக்கெடுப்பை 18-ந் தேதி(அதாவது நேற்று) நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள பா.ஜனதாவை சேர்ந்த 105 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்திருந்தனர். அதே நேரத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 20 பேர் சட்டசபைக்கு வரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்றே நடத்தி விட வேண்டும் என்று பா.ஜனதா எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய் விட்டது.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கும், சபாநாயகர் காலதாமதம் செய்யக்கூடாது என்று கூறியும், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து பா.ஜனதாவினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் மூலம் கவர்னர் வஜூபாய் வாலா தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று மாலை 6 மணியிலேயே சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என முதல்-மந்திரி குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய் வாலா கெடு விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு கவர்னர் வஜூபாய் வாலா எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கூட்டணி அரசில் அங்கம் வகித்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். அவர்கள் ராஜினாமா செய்திருப்பதற்கான கடிதங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்து இருப்பதுபோல, என்னிடமும் கொடுத்துள்ளனர். 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்திருப்பதை திரும்ப பெற்றுள்ளனர். அதுதொடர்பான கடிதங்களையும் என்னிடம் கொடுத்துள்ளனர். இந்த தருணத்தில் பெரும்பான்மையை நிரூபித்த காட்ட வேண்டியது உங்களது(குமாரசாமி) கடமையாகும்.
அதனால் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட நாளை(அதாவது இன்று) மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று இரவு மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-முதல்-மந்திரி குமாரசாமி நாளை(அதாவது இன்று) மதியம் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டு என்று கவர்னர் வஜூபாய் உத்தரவிட்டு இருக்கிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முன்பாக எல்லா எம்.எல்.ஏ.க்களும் தங்களது கருத்துகளை கூற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நாளை(அதாவது இன்று) மதியத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். கவர்னர் மூலம் அரசுக்கு பா.ஜனதாவினர் நெருக்கடி கொடுக்கின்றனர். இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
0 Comments