கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் இடையேயான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக அமைச்சரவை கடந்த டிசம்பர் மாதம் விரிவாக்கம் செய்யப்பட்டது, அப்போது, 2 அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். அமைச்சர் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி உட்பட 5க்கும் மேற்பட்டோர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் முகாமிட்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாயின.
இதனையொட்டி குதிரை பேரம் நடக்க வாய்ப்பு உள்ளதால் பாஜக எம்எல்ஏக்கள் ஹரியானா மாநிலம் குர்காவ்ன்னில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் உடனே கர்நடகத்திற்கு திரும்ப வேண்டும் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக அரசுக்கு தங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார். இதற்கிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற உள்ளது.
இதற்கிடையே கர்நாடக கூட்டணி அரசில் உள்ள 20 முதல் 25 எம்எல்ஏக்கள் அணி மாறுவதால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்வது உறுதி என பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக முதல்வர் பதவியை இழந்த விரக்தியில் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவை தாக்கி பேசி வருவதாக குறிப்பிட்டார்.
0 Comments