Tamil Sanjikai

ஆந்திராவில், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக வரும் 30ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் இன்று (26 மே) காலை டெல்லி சென்ற அவர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் அவர்களுடைய தேர்தல் வெற்றிகளுக்கு பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.

அப்போது துகாராஜாபட்டினம் துறைமுகம், கடப்பா எஃகு தொழிற்சாலை, போலாவரம் நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட ஆந்திர மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்தார்.

மேலும் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தினார். அதற்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும் என பிரதமர் மோடி பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments

Write A Comment