ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தி கைதாவதற்கு இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலமே முக்கிய காரணம்.
தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜிக்கும், அவரது மனைவி இந்திராணிக்கும் சொந்தமான நிறுவனம் தான் ஐ.என்.எக்ஸ். மீடியா. இந்த நிறுவனத்துக்கு 2007–ம் ஆண்டு மொரிஷியசில் உள்ள வெவ்வேறு 3 கம்பெனிகள் மூலம் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான அன்னிய முதலீடு வந்துள்ளது. இந்த தொகை ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அனுமதிக்கப்பட்ட முதலீட்டை விட அதிகமாகும்.
இதைத்தொடர்ந்து 2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு துறையும், வருமான வரித்துறையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொன்டு சென்றன. இதனை வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்கு அனுப்பியது. அதன்பிறகு அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புள்ள ஒரு நிறுவனத்தில் அமலாக்கத்துறை ஆய்வு செய்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் இடையே தொடர்புடைய ஆவணங்கள் சிக்கின.
பண பரிமாற்றம், அதுமட்டும் அல்லாமல் அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தில் இருந்து கார்த்தி சிதம்பரத்தின் கணக்கிற்கு பணம் கை மாறியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பிறகு 2017–ம் ஆண்டு மே மாதம் 15–ந்தேதி முறையற்ற அன்னிய முதலீடு ஒப்புதல் என்றும், 2018–ம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாகவும் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
மேலும் ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருக்கும் போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு தகுந்த தகுதிகள் இல்லாத பட்சத்தில் முறையற்ற வகையில் அன்னிய முதலீடு பெற கார்த்தி சிதம்பரம் மூலம் உதவி பெற்றதாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன அதிகாரிகள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ப.சிதம்பரம் நிதிமந்திரியாக இருந்த போது இந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததால் இந்த வழக்கில் ப.சிதம்பரமும் சேர்க்கப்பட்டார்.
2018–ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திராணி முகர்ஜியிடம், சி.பி.ஐ.விசாரணை நடத்திய போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு முதலீடு பெறுவதற்காக தங்களுக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் இடையில் ரூ.7 கோடியே 16 லட்சம் டீல் இருந்தது என கூறியுள்ளார். இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 2018–ம் ஆண்டு கார்த்தி சிதம்பரத்தை கைதும் செய்தனர்.
கடந்த ஜூலை மாதம் நடந்த விசாரணையின் போது குற்றச்சாட்டுக்களை இந்திராணி முகர்ஜி முழுமையா ஒப்புக்கொண்டார். இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், பீட்டர் முகர்ஜி, இந்திராணி ஆகியோரின் மொத்த சொத்துக்களையும் அமலாக்கத்துறை கையகப்படுத்தியது. இந்தவழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ப.சிதம்பரத்திடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தற்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி, 2018 ம் ஆண்டு பிப்ரவரி 17 ம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்தார்.
அதில், "நானும், எனது கணவர் பீட்டர் முகர்ஜியும் 2006 ம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தோம். அப்போது அவர், தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சந்திக்கும்படியும், கார்த்தி சிதம்பரத்தின் தொழிலுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டார். டில்லி ஹயத் ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தை சென்று சந்தித்தோம். அவர் எங்களிடம் 1 மில்லியன் டாலர் லஞ்சமாக கேட்டார்" என கூறினார்.
இந்திரா முகர்ஜியின் இந்த வாக்குமூலம் தான் ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்வைக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்திரா முகர்ஜி மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் திட்டப்படி, கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கு ஆதரவாக 700,000 டாலர் (ரூ.3.10 கோடி) மதிப்பிலான 4 இன்வாய்ஸ்களை தயாரித்துள்ளனர். இதன் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக வெளிநாட்டு அந்நிய முதலீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவின் பங்குகள் 46 சதவீதமாக உயர்ந்தது. ரூ.4.62 கோடிக்கு பதிலாக சட்ட விரோதமாக ரூ.305 கோடி பிரீமியமாக பெறப்பட்டுள்ளதாகவும் இந்திராணி முகர்ஜி கூறி இருந்தார்.
இந்திராணி முகர்ஜியின் இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ப.சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, நிதியமைச்சக ஆவணங்கள் மற்றும் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் பதிலளித்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என மூத்த அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஆனால் இன்று பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம், என் வாழ்நாளில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜியை பார்த்ததில்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களின் நிறுவனத்துடன் நான் தொடர்பு வைத்திருந்ததில்லை. என்னை விசாரணைக்கு சிபிஐ அழைத்துச் சென்ற போதுதான் இந்திராணி முகர்ஜியை பார்த்தேன். மற்றபடி அவர்களுக்கும் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை” என்று கூறி உள்ளார்.
0 Comments