Tamil Sanjikai

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்தது. இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா, காஷ்மீர் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறியது.

எனினும், இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, வர்த்தகத்தையும் பாகிஸ்தான் ரத்து செய்தது. இந்த நிலையில், லடாக்கை ஒட்டிய எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்களைக் குவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான மூன்று சி 130 ரக விமானங்கள் மூலம் லடாக் பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஸ்கார்டு விமானப்படைத் தளத்துக்கு பாகிஸ்தான் ஆயுதத் தளவாடங்களைக் கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளை இந்திய உளவு அமைப்புகளும் விமானப் படை மற்றும் ராணுவம் பாகிஸ்தானின் ஸ்கார்டு விமானப் படையைக் கூர்ந்து கவனித்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளது. ஸ்கார்டு விமானப்படை தளத்துக்கு நகர்த்தப்படும் தளவாடங்கள் போர் விமானங்களுக்கு தேவையான உபகரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட ஜே 17 ரக விமானங்களையும் ஸ்கார்டு விமானப்படை தளத்துக்கு பாகிஸ்தான் கொண்டு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment