Tamil Sanjikai

ரஷ்யாவில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார கூட்டமைப்பின் போது, மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமாரும் இந்த செய்தியை கடந்த 5 ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ஆனால், உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது இந்த தகவலை மறுத்துள்ளார். பிரதமர் மகாதீர் முகமது கூறும் போது, “ரஷ்யாவின் விளாடிவோஸ்தக் நகரில் பிரதமர் மோடியை சந்தித்த போது, ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக அவர் என்னிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை.

சர்ச்சைக்குரிய வகையில் மலேசியாவில் பொதுமக்கள் மத்தியில் பேச ஜாகீர் நாயக் அனுமதிக்கப்படமாட்டார். ஜாகீர் நாயக் செல்லும் இடங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம், ஆனால், அவரை எந்த நாடும் ஏற்கத் தயாராக இல்லை" எனத் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment