Tamil Sanjikai

2007-ம் ஆண்டில் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்தன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டது. 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அமலாக்கத்துறை அவருடைய சொத்துகளை முடக்கியது.

ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.இந்நிலையில், ப.சிதம்பரம் கைதுக்கு எதிராக ஐகோர்ட்டு அவ்வப்போது இடைக்கால தடை விதித்து வந்தது.

ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கப்பிரிவு எதிர்ப்பு தெரிவித்தது. ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு தரப்பில் வாதாடப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 25-ந்தேதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுனில் கவுர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரம் மூத்த வக்கீல் கபில் சிபலுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் நேற்று பிற்பகல் சுப்ரீம் கோர்ட்டில், டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று விட்டுள்ள கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற்க மறுத்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு நேற்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் விரைந்தனர். ஒரு பெண் அதிகாரி உள்பட 6 பேர் ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

சி.பி.ஐ.யை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் ப.சிதம்பரம் வீட்டுக்கு விரைந்து வந்தனர். ஆனால் அவர் அப்போது வீட்டில் இல்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.

இந்த தகவல் கிடைத்ததும் பத்திரிகையாளர்களும் அங்கு விரைந்தனர். இதனால் டெல்லியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு நேற்று இரவு 11.30 மணிக்கு வந்த சி.பி.ஐ அதிகாரிகள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் ப. சிதம்பரம் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.

இதனிடையே, முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் இல்லத்திற்கு 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழு 3வது முறையாக இன்று காலை சென்றது. ஆனால், அவர் அங்கு இல்லை என்றதும் அதிகாரிகள் திரும்பி விட்டனர். பின் 4வது முறையாக மீண்டும் அதிகாரிகள் அங்கு சென்றனர். கடந்த 24 மணிநேரத்திற்குள் 4 முறை சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை தேடி சென்றது பரபரப்பினை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை அழைத்தபோதெல்லாம் விசாரணைக்கு நான் ஆஜராகியுள்ளேன். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ள நான் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை.

முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடாத நிலையில், முன்ஜாமீன் மறுக்கப்பட்டது ஏன்? கடந்த காலங்களில் என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என அவர் தெரிவித்து உள்ளார்.

0 Comments

Write A Comment