Tamil Sanjikai

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க மேலும் 2 இடங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய , பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ,பட்டியல் இன மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுவதால் காங்கிரஸ் கட்சிக்கு எங்களது ஆதரவை அளிக்கிறோம். ஆட்சி அமைக்க எந்த உரிமையுமின்றி பாஜக உரிமை கோருவது வேடிக்கையாக உள்ளது. மபியில் பாஜக ஆட்சி அமையக்கூடாது என்பதே எங்களது குறிக்கோள். தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் ஆதரவளிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் ஆதரவளித்ததையடுத்து மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் அழைப்பு விடுத்துள்ளார். இதனையயடுத்து இன்று ஆட்சியமைக்க உரிமைகோரி காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்திக்க உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியானதையடுத்து நாடு முழுவதிலும் உள்ள அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், அம்மாநிலத்தின் முதல்வராக 2வது முறையாக நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமுள்ள 119 இடங்களில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து சந்திரசேகர ராவ் நாளை முதல்வராக பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பதவியேற்கும் நேரம், இடம் உள்ளிட்டவைகள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

தெலுங்கானாவின் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்ட டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். முன்கூட்டியே சட்டமன்றத்தை கலைத்து சந்திரசேகர ராவ் இந்தத் தேர்தல் போட்டியிட்டது மிகவும் சவாலானதாக பார்க்கப்பட்டது. அதேபோல் கடந்த தேர்தலை காட்டிலும் தற்போது கூடுதல் இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் டிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 200 இடங்களில் காங்கிரஸ் 100 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் சார்பில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு அசோக் கெலாட் இல்லத்தில் கூடியது. இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இதனையடுத்து புதிதாக தேர்வாகி உள்ள எம்.எல்.ஏ.க்களை கூட்டி இன்று ஆலோசிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு, கூட்டத்திற்கு பிறகு முதல்வர் யார் என்பதை அறிவிக்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment