Tamil Sanjikai

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், இந்து-முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியான சற்று நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்து வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மத பேதமின்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் அதற்கு, ‘நன்றி... வணக்கம், ஜெய்ஹிந்த்’ என்று கூறிவிட்டு வேகமாக தனது வீட்டுக்கு சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது நெற்றியில் பொட்டு வைத்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்தார்.

0 Comments

Write A Comment