வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிக அளவில் பணம் கைப்பற்றதை அடுத்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. ஆம்பூர், குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் வேலூர் மாவட்டம் பள்ளிக்குப்பத்தில் உள்ள சிமெண்ட் குடோனில் இருந்து 11 கோடியே 53 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர்கள் சிலருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்தது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், உறவினர் பூஞ்சாலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
நேரடியாக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் மற்ற இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. வருமான வரித்துறை சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை அளித்திருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம் குடியாத்தம், ஆம்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் வரும் 18 ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும்.
இதனிடையே, வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது மத்திய அரசு திட்டமிட்டு செய்த சதி என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தை வரும் காலத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
0 Comments