5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்டமாக, தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிகிறது . இதனால், அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸின் பொய்யான வார்த்தைகளை ஏற்க நாடு தயாராக இல்லை என்றும், காங்கிரஸின் குடும்ப ஆட்சி, சாதி மற்றும் மதவாதங்களை ஏற்க விரும்பவில்லை என்றும், நாட்டின் இளைஞர்கள் தற்போது வளர்ச்சியையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தெலங்கானாவில் இதுவரை சுமார் 100 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்க மாநிலத்தில் காவல்துறை மற்றும் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் இருந்து வாரங்கல் நோக்கி சென்ற ஒரு காரில் இருந்து 5 கோடி, மஞ்சிர்யாலில் இருந்து நென்னெல்லா நோக்கி சென்ற ஆட்டோவில் இருந்து 50 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுவரை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 99 கோடியே 50 லட்சம் பணமும், 9 கோடி மதிப்புள்ள மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments