கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக, தற்போது ஆட்சி நடத்திவரும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், பாதுகாப்பு கருதி சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள, கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடயே அடிதடி மோதல் ஏற்பட்டு, அவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்கள் தரப்பு எம்.எல்.ஏ.களை இழுத்து பாஜக ஆட்சியமைக்க முயல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ஆட்சியை காப்பாற்றும் வகையில், 70-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ராம்நகர் மாவட்டம் பிடதி அருகில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கருது வேறுபாடு ஏற்பட்டு இரண்டு தரப்பாக பிரிந்து காரசாரமாக விவாதம் செய்துள்ளனர்.
இதில் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அடிதடியில் முடிந்த இந்த மோதலில், விஜயநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த்சிங் என்பவர் படுகாயம் அடைந்தார். தற்போது தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
0 Comments