ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் (வயது 74) கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில், செப்டம்பர் மாதம் 5-ந் தேதி முதல் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், ப.சிதம்பரத்துக்கு நேற்று மதியம் 1.30 மணிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் இருந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன.
அதன் பிறகு இரவில் அவர் மீண்டும் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ப.சிதம்பரத்தின் உடல்நிலை நன்றாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவ குழு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்க மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வந்தது வழக்கை விசாரித்த நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு கொசுவலை கொடுக்கவும், வாரம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யவும், மாஸ்க் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.. புறநோயாளியாக சிகிச்சை அளிக்க வேண்டும்; சிறப்பு சிகிச்சை அளிக்க தேவையில்லை என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments