Tamil Sanjikai

தெலுங்கானா மாநில சட்டசபை 119 இடங்களை கொண்டது. இதற்கு வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ,காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.

பா.ஜ.க. தலைவர் அமித் ஷா 4 பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி இரண்டாவது கட்டமாக இன்று பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இங்கு முதல்கட்ட பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, நிஜாமாபாத் நகரை லண்டன் நகருக்கு இணையாக மாற்றிக் காட்டுவேன் என்று உங்கள் முதல்வர் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த பகுதிக்கு தேவையான குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இங்குள்ள மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மெஹபூப்நகர் பகுதியில் இன்று நடைபெற்ற தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியின் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் பங்கேற்று பேசினார். அப்போது, நாங்கள் ஆட்சி செய்யும் தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இதுபோல் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் எந்தவொரு மாநிலத்திலாவது வழங்கப்பட்டுள்ளதா?. குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் தெலுங்கானா மாநில அரசு முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானாவில் மின்சாரப் பற்றாக்குறை என்பதே இல்லை. ஆனால், மோடி, தெலுங்கானாவில் மின்சாரம் இல்லை கூறுகிறார்.

ஒரு முதல்வருக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை மோடி சுமத்த முடியாது. பொறுப்புள்ள பிரதமர் பதவியில் இருக்கும் மோடி ஓட்டுக்காக இப்படி பொய் சொல்ல கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment