Tamil Sanjikai

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவால் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பிய நிலையயில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில், தேமுதிக-பாஜக இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.....

டெல்லியிலிருந்து, தனி விமானம் மூலம், சென்னை வந்த மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி பங்கீடு உடன்பாட்டில் கையெழுத்திட்டார். இதன் பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின், விருகம்பாக்கம் இல்லத்திற்கு சென்றார்.

இவருடன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், கட்சியின் மேலிடப் பார்வையாளர் முரளிதர ராவ், மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதிஷ் ஆகியோரை, பியூஷ் கோயல் மற்றும் பாஜக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு, சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நேரடியாக பதிலளிக்காத பியூஷ் கோயல், எல்லா நேரத்திலும் அரசியல் குறித்து பேச வேண்டியதில்லை என்றார். அரசியலை தாண்டி விஜயகாந்துடன் நல்ல நட்புறவு தொடர்வதால், உடல்நலம் குறித்து கேட்டறிய தாம் வந்ததாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் சுதிசும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், 15 நிமிடங்கள் தனியே பேசியதாகவும் கூறப்படுகிறது... 9 தொகுதிகள் வரையில் தேமுதிக கேட்பதாகவும், இதனால், தேமுதிக - பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments

Write A Comment