Tamil Sanjikai

இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக குறைந்தது 500 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் எல்லையோரம் தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக குறைந்தது 500 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் எல்லையோரம் தயாராக இருப்பதாகவும், அவர்களை எந்த மட்டத்திலும், எந்த அளவிலும், எங்கும் பதிலளிக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ராணுவத் தளபதி பிபின் ராவத் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானின் பாலக்கோட்டில், இந்திய விமானப் படை தாக்கி அழித்த பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் சர்ஜிக்கல் தாக்குதல் என்பதையும் தாண்டி பதிலடி வலுவாக செய்யப்பட வேண்டி இருக்கும். இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக குறைந்தது 500 பேர் பாகிஸ்தானில் எல்லையோரம் தயாராக இருக்கின்றனர். பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காகவே எல்லைக்கு அந்த பக்கத்திலிருந்து பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்குகின்றன. இந்த தாக்குதலை எப்படி கையாள வேண்டும் என்பது ராணுவத்திற்கு நன்றாக தெரியும்’ என்றார்.

மேலும், ஜம்மு-காஷ்மீரில் மக்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் எந்த துண்டிப்பு இல்லை என்றும், பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானில் இருந்து அவர்களை கையாள்பவர்களுக்கும் இடையேயான தகவல் தொடர்புதான் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்த ராணுவத் தளபதி பிபின் ராவத், காஷ்மீர் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது தவறு. தொழில், வர்த்தகம் என காஷ்மீரில் மக்களின் வாழ்க்கை வழக்கம்போல் இயல்பாகத்தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக குறைந்தது 500 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் எல்லையோரம் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய ராணுவம், எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments

Write A Comment