Tamil Sanjikai

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து சாதகமான நடவடிக்கை எதுவும் இல்லாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, தலைநகர் டெல்லியில் உள்ள ஆந்திரபவனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார். இதன்படி, இன்று காலை 8 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கருப்பு சட்டை அணிந்த படி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள சந்திரபாபு நாயுடு, போராட்டத்துக்கு இடையே பேசியதாவது:- “ எங்களின் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவில்லை என்றால், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

இந்த விவகாரம் ஆந்திர மக்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது. எங்களின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் அதை சகித்துக்கொள்ள மாட்டோம். தனிநபர் மீதான விமர்சனத்தை பிரதமர் மோடி உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.

0 Comments

Write A Comment