Tamil Sanjikai

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணியில் தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வந்த பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும்படி அவர் அழைப்பு விடுத்தார்.

விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோருடன் பியூஸ் கோயல் பேசினார். எல்.கே.சுதீஷிடம், பியூஸ்கோயல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியபோது, இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு எல்கே.சுதீஷ் வலியுறுத்தியுள்ளார். இதனால் அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இந்தநிலையில், தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இருந்து கொண்டே எல்.கே.சுதீஷ், தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய மந்திரி பியூஸ்கோயல், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போதும், தே.மு.தி.க.வுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணி தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தே.மு.தி.க. சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர்.

விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

அதே நேரம் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

0 Comments

Write A Comment