Tamil Sanjikai

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில், தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் (வயது 74), 2007-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது அவர், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத்தந்தார்; இதற்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உதவினார் என்ற புகார் எழுந்துள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக அனுமதி பெற்றுத்தந்ததற்காக கார்த்தி சிதம்பரம் மூலமாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து ப.சிதம்பரம் லஞ்சம் பெற்றார் என்று சொல்லப்படுகிறது.

இதில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. ஒரு குற்ற வழக்கும், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்க பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் பதிவு செய்து, அவை டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் கைதாகி, தற்போது ஜாமீனில் உள்ளார்.

ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சி.பி.ஐ. கைது செய்து., சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

இந்நிலையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ப. சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்வதற்காக 14 நாட்கள் விசாரணை காவல் வழங்கும்படி அமலாக்க துறையினர் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு, ப. சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், சிறையில் உள்ள ப. சிதம்பரத்திடம் ஏன் அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொள்ள கூடாது என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார், ப. சிதம்பரத்தை அமலாக்க துறை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதன்படி அக்டோபர் 24ந்தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

0 Comments

Write A Comment