Tamil Sanjikai

மிசோரம் மாநில முதல்வராக சோரம் தங்கா நாளை மறுநாள் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்தும் சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்ட சந்திரசேகர் ராவ் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சி 37.6 சதவீத வாக்குகளுடன் 26 இடங்களில் வெற்றி பெற்றது.

பத்து ஆண்டுகளாக மிசோரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் மிசோ தேசிய முன்னணி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வருமான சோரம் தங்கா கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ராஜசேகரன் ஆட்சியமைக்க வருமாறு சோரம் தங்காவிற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து புதிய முதல்வராக ஆளுநர் மாளிகையில் நாளை மறுநாள் மதியம் 12 மணிக்கு சோரம் தங்கா பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்வருடன் அமைச்சர்கள் பதவியேற்பது குறித்து எந்த தகவலும் இது வரை அறிவிக்கப்படவில்லை.

0 Comments

Write A Comment