Tamil Sanjikai

டெல்லியில் நடைபெற்று வரும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இன்று இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 48 கிலோ எடைப்பிரிவுக்காக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் 6-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் மணிப்பூரை சேர்ந்த 35 வயது நிறைந்த மேரி கோம் 3 குழந்தைகளுக்கு தாயானவர். அவர் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றுள்ளார். தனது முதல் தங்க பதக்கத்தினை 16 வருடங்களுக்கு முன் வென்றார்.

இறுதியாக 2010-ஆம் ஆண்டில் 48 கிலோ எடை பிரிவில் அவர் தங்கம் வென்றார். உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அயர்லாந்து நாட்டு வீராங்கனை கேட்டி டெய்லருக்கு இணையாக பதக்கங்களை குவித்திருந்த மேரி கோம் இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் அதிக பதக்கங்களை குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற அவர், முதலில் எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். உங்களது அன்பு மற்றும் ஆதரவால் 2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தகுதி பெற முடிந்தது. அதில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவுடன் இன்னும் இருக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment