சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, சபரிமலைக்கு இளம்பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தரிசனத்துக்கும் பெண்கள் அதிகளவு வருவார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், போராட்டக்காரர்களை சமாளிக்கவும் இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சபரிமலை செல்லும் அனைத்து பாதைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரிடம் முன் அனுமதி பெற்றே சபரிமலை செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பத்தினம் திட்டா, நிலக்கல், எரிமேலி, பம்பை என அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. மண்டல பூஜை, மகர விளக்கு விழாக்களின்போது ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27- ஆம் தேதி நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இந்நிலையில், சபரிமலையில் பெண்கள் தரிசனம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று காலை அம்மாநிலத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சிலமணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பினராயி விஜயன், ‘செப்டம்பர் 28-ஆம் தேதி இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுதான் இன்னும் நடைமுறையில் உள்ளது. தரிசனத்துக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் கோர்ட் உத்தரவு. இந்த உத்தரவுக்கு எதிராக எந்த நிலைப்பாட்டையும் கேரள அரசு எடுக்க முடியாது. நாங்கள் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், கோர்ட்டின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டிய கட்டாயமும் அரசுக்கு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
0 Comments