Tamil Sanjikai

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பா் மாதம் 28ம் தேதி தீா்ப்பு வழங்கியது. மேலும் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு ஜனவரி 22ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், முந்தைய தீா்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தொிவித்து விட்டனா்.

சுப்ரீம் கோர்ட்டுக்கு தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பா.ஜ.க. உட்பட இந்து அமைப்புகள் பலவும் போராட்டம் நடத்தின.

கோவில் நடை திறக்கப்பட்ட போதும் பெண்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று கோவில் அருகில் பலரும் போராட்டம் நடத்தினா். போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றபோது காவல் துறையினருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தடியடி நடைபெற்றது.

இந்நிலையில் கோவிலுக்குள் செல்ல தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேரளா மாநில ஐகோர்ட்டில் 4 பெண்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனா்.

இதனைத் தொடா்ந்து கேரளா ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வரும் நிலையில், பெண்கள் மட்டும் கோவிலுக்குள் செல்ல 2 நாட்கள் தனியாக ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக மாநில அரசு தொிவித்துள்ளது.

0 Comments

Write A Comment